காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து
திருப்பணிகள் நடைபெறுவதால் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.
மோகனூர்
மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், தைப்பூச தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 5-ந் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் ரூ.40 லட்சம் மதிப்பில் கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இதன்படி கோவில் முன் கோபுரம் வர்ணம் பூசுதல், பழைய மரக் கட்டைகளை அகற்றி புதியது மாற்றுதல், மேல் தளம் அமைத்தல், பழைய ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அகற்றி, பூ வேலைபாடு அமைத்தல், கதவு, சன்னல் அமைத்தல், கழிப்பறை கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக தைப்பூசத்தையொட்டி இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் பூஜைகள் மட்டும் நடைபெறும். அதன்படி வருகிற 9-ந் தேதி வரை தினமும் பாலதண்டாயுதபாணி சாமிக்கு அபிேஷக ஆராதனை, தீபாராதனை நடக்கிறது. வருகிற 5-ந் தேதி தைப்பூசத்தன்று பால் குடம், தீர்த்தக்குட ஊர்வலம், காவடி ஊர்வலம் மற்றும் அபிேஷகங்களும் நடைபெற உள்ளது. தைப்பூசம் அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.