சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்
ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று (ெசவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஓசூர்
ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
சந்திரசூடேஸ்வரர் கோவில்
ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரசாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திரு விழா, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. விழாவையொட்டி, கடந்த மாதம் 10-ந் தேதி, ஓசூர் தேர்பேட்டையில் பால் கம்பம் நட்டு, தேர் கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 28-ந் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று வரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும், சிம்ம வாகனம், மயில்வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்சவங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது.
தேரோட்டம்
இந்தநிலையில் நேற்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று காலை 10.50 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
நாளை (புதன்கிழமை) இரவு தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள், கோவில் நிர்வாகம் சார்பிலும், ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் தேரோட்ட கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையிலும் செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.