மளிகைக்கடையில் செல்போன் திருடிய 3 வாலிபர்கள் கைது
மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் பகுதியில் மளிகைக்கடையில் செல்போன் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் பகுதியில் மளிகைக்கடையில் செல்போன் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் திருட்டு
மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் சமத்துவபுரம் பகுதியில், முத்துச்சாமி என்பவரது மனைவி ராணி (வயது 46) மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய மளிகைக் கடைக்கு 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் ராணியிடம் பீடி, தீப்பெட்டி, வாட்டர் பாட்டில், தண்ணீர் டம்ளர் போன்றவற்றை வாங்கியுள்ளனர்.
அதற்கான பணத்தை பெற்றுக்கொண்ட ராணி வேறு வேலையாக கடைக்கு உள்ளே சென்றுள்ளார். அப்போது சத்தமில்லாமல் கடைக்குள் நுழைந்த வாலிபர்கள் கடைக்குள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். ராணி திரும்பி வந்து பார்த்த போது செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது.
3 வாலிபர்கள் கைது
உடனடியாக சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கண்காணிப்புக் கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல் மற்றும் நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தனர். இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணாபுரம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் அருண் குமார் (வயது 23), ருத்ராபாளையம் குருவக்களம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் சந்தோஷ் என்ற மணிகண்டன் (24), கிருஷ்ணாபுரம் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவரது மகன் முத்துமாணிக்கம் (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போனை மீட்டனர்.