ஆடி பெருக்கு விழா கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் ஆடி பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. புதுப்பெண்கள் தாலி சரடுகள் மாற்றிக்கொண்டனர்.
ஆடிப்பெருக்கு விழா
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவிரி ஆற்றின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களான மதனத்தூர், வாழைக்குறிச்சி, மேலகுடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழகுடிகாடு, அன்னங்காரம்பேட்டை, கோடாலிகருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் காவிரி தாயை வழிபடும் நிகழ்வுகள் நடைபெற்றன.
சுமங்கலி பெண்கள் காவிரி தாயை வழிபட்டு தங்களது தாலி கயிற்றை புதியதாக மாற்றி சடங்குகளை செய்தனர். இவ்வாறு செய்வதின் மூலம் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சுமங்கலி பெண்கள் கொள்ளிடம் ஆற்றின் படுகைகளில் வழிபாடு மேற்கொண்டனர். அதுபோல் புதிதாக திருமணமான தம்பதிகள் காவிரி தாய்க்கு சிறப்பு வழிபாடுகளை செய்து தங்களது தாலி கயிற்றை புதிதாக மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறுவர்-சிறுமிகள் ஆடிப்பெருக்கையொட்டி சப்பர தட்டி என்னும் சிறு தேரை ஓட்டி விளையாடி மகிழ்ந்தனர்.
கீழப்பழுவூர்
திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலா தலமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக்கோவிலின் முன்பு கொள்ளிடம் ஆறு உள்ளது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் கொள்ளிடம் ஆறு கோவிலின் முன்பு வரும்போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓட ஆரம்பிக்கும். இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி புதுக்கோட்டை, செம்பியக்குடி, குலமாணிக்கம், இலந்தைகூடம், கண்டிராதித்தம், அரண்மணைகுறிச்சி, பாளயபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் வருகை தந்திருந்தனர். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு மணலில் அமர்ந்து காப்பரிசி படையல் போட்டு, தேங்காய், பழம், வளையல், மஞ்சள்கயிறு உள்ளிட்ட பொருட்கள் வைத்து சாமி கும்பிட்டு மனைவிமார்கள் கட்டியிருக்கும் தாலியை பிரித்து புது மஞ்சள் கயிற்றுடன் கோர்த்து கணவன்மார்கள் அவர்கள் கழுத்தில் மீண்டும் கட்டி விடுவார்கள். பின் படையல் போட்ட பொருட்களை ஆற்றில் வரும் நீரில் விடுவது வழக்கம். மேலும் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மரத்தாலான தேர் செய்து அதில் சாமி படங்களை வைத்து வழிபட்டு அவர்களின் கிராமத்திலிருந்து நண்பர்களோடு சேர்ந்து தேரை இழுத்து வந்து இந்த கோவிலில் வழிபாடு செய்து தேரை ஆற்றில் வரும் நீரோடு விடுவார். இதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான புதுமண தம்பதிகள் வருகை தந்து வழிபாடுகளை செய்து தாலியை பிடித்து கட்டிக் கொண்டனர். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இறைச்சி கடைகளில் கூட்டம்
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொதுமக்களில் பலர் தங்களது வீடுகளில் மதியம் உணவாக அசைவம் சமைத்து சாப்பிட்டனர். இதனால் காலையில் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளிலும், மீன் கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.