கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
'கலைஞர் 100' வினாடி-வினா போட்டிக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழினத்தின் அறிவொழியாக தன்னிகரில்லா ஆளுமையாக வளர்ந்து வழிகாட்டிய கலைஞரின் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தையும், தமிழ்நாடு எனும் பெரு நிலத்தையும், தமிழ் இன வரலாற்றையும் அனைவரும் அறிந்திடும் வண்ணம் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் 'கலைஞர் 100' வினாடி-வினா போட்டி மகளிர் அணி சார்பில் நடைபெற இருக்கிறது.
நமது முந்தைய களப்போராட்டங்களை; அரசியல் புரட்சிகளை; அதற்கு வித்திட்ட நமது முன்னோர்களை; நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறவும் இந்த வினாடி-வினா போட்டி பெரும் வாய்ப்பாக அமையும். பத்தாயிரம் கேள்விகளோடு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது.
இந்த வினாடி வினா போட்டியில் எல்லோரும் கலந்துகொண்டு தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம். 'kalaingar100.co.in' என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இணையவழி போட்டிகள் தொடங்க இருக்கிறது. வரலாற்றின் தனிப்பெரும் மக்கள் இயக்கத்தை இணையில்லா கலைஞர் நூற்றாண்டில் கொண்டாடுவோம் வாருங்கள்'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.