"தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை


தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை
x

உள்நோக்கத்துடன் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.

சென்னை,

ஜீ ஸ்கொயர் நிறுவன கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது என்றும் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறும்போது, 'சி.எம்.டி.ஏ.வில் புதிதாக சி.இ.ஓ. பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவறான பார்வையாகும். சி.எம்.டி.ஏ.வில் 1978-ல் இருந்து சி.இ.ஓ. பதவி உள்ளது.

இதுவரை அந்த பதவியில் 45 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றி உள்ளனர். இப்போது 46-வது ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்த பதவியில் உள்ளார். இந்த பதவி அவசியமானது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டாக சி.இ.ஓ. பணி நிரப்பப்படவில்லை.

கோவையில் 122 ஏக்கருக்கான ஒப்புதலுக்கு சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019-அன்று சி.எம்.டி.ஏ.வில் விண்ணப்பம் செய்துள்ளார். அவருக்கு 28.1.2021 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. இதைத்தான் அண்ணாமலை, நாங்கள் அனுமதி கொடுத்தது போல் பேசுகிறார்.

சி.எம்.டி.ஏ.வில் அனுமதி கேட்டு சிவமாணிக்கம் பெயரில் தான் விண்ணப்பம் வந்துள்ளது. ஜீ ஸ்கொயர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை. இதைத்தான் ஜீ ஸ்கொயருடன் சம்பந்தப்படுத்தி அவர் பேசி உள்ளார். நிலம் அனுமதிக்கு பிறகு கூட ஜீ ஸ்கொயர் அதை வாங்கி இருக்கலாம்.

அதே மனை பிரிவுக்கு இவர்கள் 12.12.2019-ல் மற்றொரு விண்ணப்பம் செய்ததின் பேரில் 30.3.2021-ல் டி.சி.டி.பி. அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு அவர் சொல்லியது போல் 8 நாளில் அனுமதி கொடுக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கவில்லை.

எனவே அண்ணாமலை சொல்லி இருப்பது முழுக்க முழுக்க தவறு. அண்ணாமலை சரியான ஆதரங்களோடு பேசினால் நல்லது. சரியான விவரங்களை திருத்திக்கொள்ள தயார். ஆனால், உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும்"

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


Next Story