தொழிலாளர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
களக்காடு அருகே தொழிலாளர்களை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரம், உதயமார்த்தாண்டபேரியை சேர்ந்தவர் தசரத் மகன் சஞ்சய் (வயது 30). கட்டிட தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஒருவர், சஞ்சய் மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்துள்ளார். இதனை அவர் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சஞ்சய், பெருமாள், கணேசமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டு ஜெ.ஜெ.நகர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த படலையார்குளத்தை சேர்ந்த சரவணவேல் மகன் முத்து (20) மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் உள்பட 4 பேர் சேர்ந்து சஞ்சையை கற்களாலும், கம்பாலும் தாக்கினர். இதை தடுக்க வந்த பெருமாள், கணேசமூர்த்தியையும் தாக்கினர். இதில் காயம் அடைந்த 3 பேரும் களக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்து உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.