காருக்கு தீ வைப்பு
நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது50). இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டில் அருகில் நிறுத்திவிட்டு தூங்கி கொண்டு இருந்தார். இந்த கார் திடீரென நள்ளிரவு 12 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளையராஜா இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலைய உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாச்சலம் தலைமையிலான தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் பின்புற இருக்கை, டயர் உள்ளிட்ட பாகங்கள் எரிந்து சேதம் அடைந்தன. காரின் பின்புறத்தில் இருந்து தீ பரவி இருப்பதால், மர்மநபர்கள் யாராவது முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்தார்களா? என்கிற கோணத்தில் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.