நெல்லையில் கால்வாய் தூர்வாரும் பணி-கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
நெல்லையில் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லையில் கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
தூர்வாறும் பணி
நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள கால்வாயில் புதர் செடிகள், அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இந்த கால்வாயில் தண்ணீர் நிரம்பி சாலையில் வெளியேறியது.
இதனால் நெல்லை- தென்காசி சாலையில் கல்லணை பள்ளி அருகில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு 5 நாட்கள் தண்ணீர் தேங்கி கிடந்தது. எனவே இந்த கால்வாயை தூர்வார கலெக்டர் விஷ்ணு முடிவு செய்தார்.
அதன்படி நேற்று இந்த கால்வாயை தூர்வாரும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயில் உள்ள அமலைச்செடிகள், புதர் செடிகளை அகற்றினர்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
21 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்
தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய், கோடகன் கால்வாய் ஆகிய 3 கால்வாய்களில் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதில் பாளையங்கால்வாய் 42 கிலோமீட்டர் தூரத்திற்கும், கோடகன் கால்வாய் 24.6 கிலோமீட்டர் தூரத்திற்கும், நெல்லை கால்வாய் 28.4 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தூர்வாரும் பணி நடக்கிறது.
பாளையங்கால்வாய் மூலம் 9 ஆயிரத்து 500 ஏக்கரும், கோடகன் கால்வாய் மூலம் 6 ஆயிரம் ஏக்கரும், நெல்லை கால்வாய் மூலம் 6 ஆயிரத்து 410 ஏக்கரும் என 21 ஆயிரத்துக்கும் அதிகமாக ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
குப்பைகள் கொட்டுவதை நிறுத்த...
இந்த கால்வாய்களை தூர்வாருவதன் மூலம் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படாது. வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னதாகவே இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும். எனவே நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை அனைவரும் நிறுத்த வேண்டும். வருகிற 1-ந்தேதி கார் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தொடர்பாக தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
75 சதவீத குளங்களில் தண்ணீர்
நெல்லை மாவட்டத்தில் தற்போது 75 சதவீத குளங்களில் தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக தூர்வாரும் பணிகளை முடிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். கால்வாய்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், மாநகராட்சி உதவி ஆணையாளர் லெனின், நெல்லை தாசில்தார் (பொறுப்பு) லட்சுமி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி பொறியாளர்கள் மாரியப்பன், சண்முகநந்தினி, மாநகராட்சி கவுன்சிலர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.