இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 136 இடங்களில் இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடந்தன. இந்த முகாமை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 136 இடங்களில் இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடந்தன. இந்த முகாமை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை கோட்டை உருது நடுநிலைப்பள்ளி, மற்றும் அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக சிறப்பு காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 136 இடங்களில் இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றம் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர் என அனைவருக்கும் காய்ச்சல், ரத்த அழுத்தம், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
400 பணியாளர்கள்
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களின் உடலை பரிசோதனை செய்து கொண்டு உரிய சிகிச்சை பெற்று கொள்ளலாம். மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்று கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளை மூடி வைத்திடவேண்டும். குடிநீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும். முகாமில் 36 நடமாடும் மருத்துவ குழு மற்றும் பள்ளி சிறார்களுக்காக சிறப்பு குழு என மொத்தம் 400 மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் இனியள் மண்டோதரி, தாமரைதென்றல், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.