பெரியூரில் உறுப்பினர்கள் கல்வித்திட்ட பயிற்சி முகாம்
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பெரியூரில் உறுப்பினர்கள் கல்வித்திட்ட பயிற்சி முகாம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் வத்தல்மலை பெரியூரில் உள்ள மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வித் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சந்தானம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மலைவாழ் மக்கள் அனைவரும் பொருளாதார முன்னேற்றம் அடைய கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாகி கடன் பெற்று பயன்பெற வேண்டும். இந்த சங்கத்தில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடனாக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், 5 ஆண்டில் திருப்பி செலுத்தும் மத்திய கால கடனாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும். இந்த கடனை உரிய தேதியில் திருப்பி செலுத்தி புதிய கடன் பெற்று கொள்ளலாம். கால்நடை பராமரிப்புக்காக ஒரு கறவை மாட்டிற்கு ரூ.14 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்குள் அசலை திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் கடனாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 2 நபர் ஜாமீன் பேரில் ரூ.99 ஆயிரம் வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது என்று கூறினார். முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புதிய கடன் வழங்க விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. பங்கு தொகை செலுத்தி 50 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். நிகழ்ச்சியில் சரக துணை பதிவாளர் மணிகண்டன், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ரவி, கள மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.