ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் வயர்கள்


ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் வயர்கள்
x

கேபிள் வயர்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

பெரம்பலூர்

இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. குறிப்பாக கேபிள் டி.வி.க்கான இணைப்புகள் கேபிள் மற்றும் வயர்கள் மூலமே வழங்கப்படுகிறது. பல இடங்களில் கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. பல இடங்களில் தெருவிளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆபத்தை ஏற்படுத்தும்

இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த வயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் வயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும்கூட ஏற்படுத்தி விடுகின்றன.

தொங்கிக்கிடக்கும் வயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டு செல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்நிறுவனங்கள் அதைச் சரிவர செய்வது கிடையாது. கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டு செல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர். பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலையையும் காண முடிகிறது. இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுக்கின்றனர். அதன் விவரம் வருமாறு:-

உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

தா.பழூரை சேர்ந்த வக்கீல் பிரபு:- மின்கம்பங்களில் கேபிள் வயர்கள் கட்டப்படுவதால் அதனை பராமரிப்பதற்கு ஏறி இறங்கக்கூடிய கேபிள் தொழிலாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதேபோல் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏறும்போது கேபிள் ஒயர்கள் இடையூறாக உள்ளன. இதனால் மின் ஊழியர்கள் மின்கம்பங்களில் இருந்து தவறி விழுந்தோ அல்லது கேபிள் ஒயர்களுக்கு பயன்படும் ஸ்டே கம்பிகளில் மின்சாரம் பாய்வதனால் ஏற்படும் தவறுகளாலோ உயிரிழப்பு அபாயம் அல்லது பலத்த காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கிராமங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் ஒயர்கள், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதால் மின்வாரிய ஊழியர்களும் அதனை அப்புறப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இது போன்ற சூழ்நிலை ஏற்படாமல் தடுக்க கேபிள் டி.வி. வினியோக உரிமம் பெற்றுள்ளவர்கள, கேபிள் ஒயர்களை புதைவட தொழில்நுட்பம் மூலம் தரை வழியாக அனைத்து வீதிகளுக்கும் எடுத்துச் செல்லலாம். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இது சாத்தியமானது. அல்லது தனியாக கம்பங்கள் நட்டு ஒயர்களை யாருக்கும் சிரமமின்றி கொண்டு செல்லலாம்.

கேபிள் ஒயர்களை மின் கம்பங்களில் கட்டுபவர்களுக்கும், அரசு கேபிள் டி.வி. தாசில்தாருக்கும் சட்ட ரீதியாக வயர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வினியோகித்து நடவடிக்கை எடுக்கலாம். இது போன்ற அத்தியாவசியமான விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சரியான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பூமிக்கடியில் பதிக்கலாம்

உடையார்பாளையத்தை ேசர்ந்த ஜெகநாதன்:- கேபிள் ஒயர்களை குறுக்கும், நெடுக்குமாக சாலையின் இருமருங்கிலும் உள்ள மின்கம்பங்கள் போன்றவற்றிலேயே பெரும்பாலும் கட்டப்பட்டுள்ளன. அந்த கேபிள்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களில் சிக்கி அறுந்து மின் பாதைகளில் விழும் நிலை உள்ளது. அத்தகைய சமயங்களில் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க பூமிக்கடியில் கேபிள்களை பதித்து கொண்டு செல்லலாம். அல்லது ேகபிள் ஒயர்கள் பயன்பாடின்றி நேரடியாக சிறிய டிஷ் ஆண்டனா-செட்டாப் பாக்ஸ் முறையில் கேபிள் டி.வி. இணைப்பு வழங்கலாம். அதுவரை கேபிள் வயர்கள் மட்டுமின்றி இணையதள பயன்பாட்டிற்கான ஒயர்களையும் தனியாக கம்பங்கள் நட்டு, முறையாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்துக்கு உள்ளாகின்றனர்

வெண்மணியை சேர்ந்த வரதராஜன்:- பெரம்பலூர் மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சாலைகளின் நடுவிலும், சாலைகளின் ஓரங்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்களில் அரசு மற்றும் தனியார் கேபிள் ஒயர்கள் மற்றும் இணையதள கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக மின் கம்பங்களில் எந்தவித நடைமுறையும் பின்பற்றப்படாமல், பல்வேறு தனியார் நிறுவனங்களின் கேபிள்கள் கட்டப்படுகின்றன. ஒரு மின் கம்பத்தில் 10-க்கும் மேற்பட்ட வயர்கள் கட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது. பல இடங்களில் ஒயர்கள் அறுந்து சாலையின் குறுக்கே தொங்கிக் கொண்டு, இடையூறாகவும் உள்ளது. அவ்வாறு தொங்கும் ஒயர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. அதே வேலையில் கனரக வாகனங்கள் உயரமாக லோடுகளை ஏற்றிச்செல்லும்போது ஒயர்கள் சிக்கி துண்டாகிறது. இதனால் பின்னால் வருபவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கேபிள் ஒயர்களை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த மனோகரன்:- கேபிள் வயர்களை தனியாக கம்பங்கள் அமைத்து கொண்டு செல்ல வேண்டும். அதுதான் முறையானது. ஆனால் மின்கம்பங்களின் வழியாக கேபிள் ஒயர்களை கட்டி, கொண்டு செல்லப்படுவது தவறானது. பலத்த காற்று வீசும் சமயங்களில் மின் வயர்களும் கேபிள் வயர்களும் ஒன்றுடன் ஒன்று உராய்வதால், மின்தடை மற்றும் மின்சாதன பழுதுகள் ஏற்படுகின்றன. மேலும் மின்கம்பிகள் மீது கேபிள் ஒயர்களில் உள்ள கம்பிகள் உரசும்போது, அதன் வழியாக மின்சாரம் பாயும் அபாயமும், அந்த சமயங்களில் கேபிள் டி.வி. இணைப்பை தொடுபவர்கள் மீது மின்சாரம் பாயும் அபாயமும் உள்ளது. இது போன்ற அபாயங்களை தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story