சென்னையில் மும்முரமாக நடைபெறும் பணிகள்: வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால்வாய்கள் கைகொடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சென்னையில் மும்முரமாக நடைபெறும் பணிகள்: வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால்வாய்கள் கைகொடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

சென்னையில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால்வாய்கள் கைகொடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னை

சென்னையை அச்சுறுத்தும் முக்கிய காரணிகளில் மழையும் ஒன்று. 'திருவிளையாடல்' பட பாணியில் 'பிரிக்க முடியாதது எது', என்றால், 'சென்னையில் மழையும்..., மக்கள் அவதியும்...' என்றுதான் சொல்லமுடியும். அந்தளவு மழைக்காலங்களில் சென்னை மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலே, சென்னை மக்களுக்கு பீதி வந்துவிடும்.

2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தையும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பையும், சென்னை மாநகரே தத்தளித்தையும், மக்கள் அவதிப்பட்டதையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. அதுபோன்ற ஒரு அவதி மீண்டும் சென்னைக்கு வந்துவிடக்கூடாது என்ற வகையில்தான் சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் இடையில் இந்த பணிகள் தொய்வடைந்ததின் எதிரொலியாக மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். சாலையோரம் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் விடப்பட்ட பள்ளங்கள், குவியல் குவியலாக கிடக்கும் மணல்மேடுகள் போன்றவை கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின. குறிப்பாக வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் திட்டப்பணி மக்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்தி வந்தன.

இதையடுத்து மழைநீர் வடிகால்வாய் பணிகளை துரித வேகத்தில் நடத்தி முடித்திட அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி, வருகிற 15-ந்தேதிக்குள் மழைநீர் வடிகால்வாய் பணிகளை முடித்துவிட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன் எதிரொலியாக நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்ய தொடங்கியது. காலை 6 மணிக்கு பிறகு சாரல் மழை லேசான மழையாக உருமாறியது. அதனைத்தொடர்ந்து அதே அளவிலேயே தொடர்ந்து மழை நீடித்தது.

இந்த மழையால் சென்னை மாநகரே நேற்று குளிர்ந்து போனது. அதேவேளை கொளத்தூர், கொரட்டூர், பாடி, நுங்கம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரில் பல இடங்களில் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கவும் தொடங்கியது. காலை 11.30 மணிக்கு மேல் மழை ஓய்ந்து, சூரிய வெளிச்சம் சற்று தலைகாட்ட தொடங்கியது. இந்த மழையால் நகரின் பல சாலைகள் சகதிக்காடானது. அதில் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்வதையும் பார்க்க முடிந்தது.

இந்த ஒருநாள் மழை ஏற்படுத்திய தாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கொத்தவால்சாவடி எம்.குமாரவேலன்:-

கொத்தவால்சாவடியில் மழைநீர் பிரச்சினை பெரிய அளவில் இல்லை. இங்கு மழைநீர் வடிகால்வாய் பணிகள் சிறப்பாகவே நடந்து வருகிறது. ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதும், மழைக்காலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதும் நீண்டகால பிரச்சினையாக இருக்கிறது. எனவே பணிகளை சிறப்பாக கையாண்டு வரும் தமிழக அரசு, எங்கள் பிரச்சினை தீரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.

விருகம்பாக்கம் ஜி.அறிவுச்செல்வி:-

இந்த லேசான மழைக்கே விருகம்பாக்கத்தில் மக்கள் அவதிப்பட்டு போய்விட்டார்கள். ராஜமன்னார் சாலை, அழகிரிசாமி சாலை, லட்சுமண சாமி சாலை, முனுசாமிசாலை, வன்னியர் தெரு மற்றும் அண்ணா மெயின் ரோட்டில் தண்ணீர் தேங்கிவிட்டது. இன்னும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் வேகம் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு மக்கள் நலனை கருதி உடனடி நடவடிக்கைகளை கையாள வேண்டும். மக்களின் தவிப்பை போக்க வேண்டும்.

திருமங்கலம் வி.டி.வெங்கடேஷ்:- மழைநீர் வடிகால்வாய் பணிகள் ஓரளவு தீவிரமாக நடந்து வருகிறது. அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், திருமங்கலம் பகுதிகளில் மழைநீர் பாதிப்பு கிடையாது. தோண்டப்பட்ட பள்ளங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் இதேபோல மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இப்பணிகளை முழுமையாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த பணிகள் முடிவடைந்து, தற்போதைய மழைக்காலத்தை சென்னை நல்லபடியாக கடக்க வேண்டும்.

பாடியை சேர்ந்த செல்வி:-

லேசான மழைக்கே நகரின் பல்வேறு பகுதிகள் சகதிகாடாக மாறி போயிருக்கிறது. மேலும் கொளத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த பிரச்சினை நிலவுகிறது. இந்த மழைக்கே இப்படி என்றால், இனி அடுத்தடுத்த மழைக்கு நிலைமை என்ன ஆகுமோ... என்று பயமாக இருக்கிறது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் சென்னை இந்த முறை வடகிழக்கு பருவமழையை நல்லபடியாக கடந்து செல்ல மழைநீர் வடிகால்வாய்கள் கைகொடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பருவமழை பெய்ய தொடங்கியதும் தண்ணீர் தேங்குமா, தேங்காதா? என்பது குறித்து தெரியவரும்.


Next Story