மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருமயம் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஈழக்குடிப்பட்டி பகவதி அம்மன் கோவில் உள்ளது. சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 38 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் முதல் பரிசை பறவை சின்னவேலம்மாள் மாட்டு வண்டியும், 2-ம் பரிசை பரளி யஸ்வந்த் சுரேஷ் மாட்டு வண்டியும், 3-ம் பரிசு ஈழக்குடிபட்டி பகவதி அம்மன் மாட்டு வண்டியும், 4-ம் பரிசை அடுகப்பட்டி மஹாபாலா மாட்டு வண்டியும் பெற்றன.
பரிசு
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 26 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. பந்தயமானது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் பந்தய தூரமாக போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் முதல் பரிசை மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார், சாத்திக்கோட்டை கருப்பையா மாட்டு வண்டிகளும், 2- வது பரிசு எறும்புக்குடி செல்வராஜ், கோனாபட்டு கொப்புடையம்மன், 3-ம் பரிசு கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், கள்ளந்திரி பூண்டி கேசவன், 4-ம் பரிசு கொன்னப்பட்டி முத்து பிடாரி, அரிமளம் சேர்த்து மேல் செல்ல அய்யனார் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற கீழசேவல்பட்டி- திருமயம் சாலை இருபுறமும் திரளான மக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.