காணும் பொங்கலையொட்டிரெட்டியூரில் எருதாட்டம்


காணும் பொங்கலையொட்டிரெட்டியூரில் எருதாட்டம்
x

காணும் பொங்கலையொட்டி ரெட்டியூரில் நேற்று எருதாட்டம் நடந்தது.

சேலம்

சேலம்

எருதாட்டம்

சேலம் ரெட்டியூரில் காணும் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காணும் பொங்கலையொட்டி அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு நேற்று மாலை எருதாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரெட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை அலங்கரித்து அழைத்து வந்தனர். எருதாட்டத்தில் பங்கேற்க மொத்தம் 54 மாடுகள் அழைத்து வரப்பட்டன.

இதையடுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முதலில் கோவில் மாடு அழைத்து வரப்பட்டது. அந்த மாட்டை மாடுபிடி வீரர்கள் தொட்டு வணங்கினர்.

ஜல்லிக்கட்டு

அதன்பிறகு ஒவ்வொரு மாட்டையும் அதன் உரிமையாளர்கள் மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வலம் வரச் செய்தனர். அப்போது, மாடுபிடி வீரர்கள் எருதாட்டத்தில் பங்கேற்ற மாட்டின் முன்பு பொம்மையை வைத்து ஆட்டம் காண்பித்தவாறு சென்றனர்.

இதனால் மாடு மிகவும் ஆக்ரோஷமாக அங்கும், இங்குமாக சிறிது தூரம் ஓடியது. ஒருசில மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு என்று நினைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டின் திமிலை பிடித்து சிறிது தூரம் ஓடியதை காணமுடிந்தது.

இந்த எருதாட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், பார்வையாளர்கள் மீது மாடு புகுந்துவிடாமல் இருக்க தடுப்பு கம்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

வாக்குவாதம்

எருதாட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக எருதாட்டத்தின் போது இரு தரப்பினர் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீசார் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதே போல சீலநாயக்கன்பட்டி, ரெட்டிப்பட்டி, மணியனூர், அமானி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்கலம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எருதாட்டம் நடைபெற்றது.


Next Story