நாங்குநேரியில் அண்ணன்-தங்கைக்கு அரிவாள் வெட்டு: பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது


நாங்குநேரியில் அண்ணன்-தங்கைக்கு அரிவாள் வெட்டு: பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
x

நாங்குநேரியில் அண்ணன்-தங்கை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர்் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திரா செல்வி (14) என்ற மகளும் உள்ளனர். சின்னத்துரை வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பும், சந்திரா செல்வி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர். இரவு 10 மணியளவில் திடீரென அவர்களது வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து, அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் (59) மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் கிருஷ்ணன் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்த சென்ற உறவினர்கள், பொதுமக்கள் திடீரென உடலை நாங்குநேரி-திசையன்விளை ரோட்டில் வைத்து ேபாராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தியதில், பள்ளியில் நடந்த பிரச்சினையில் மாணவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மாணவர் சின்னத்துரையை அதே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கிவர பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த விவரம் ஆசிரியருக்கு தெரியவர பள்ளி நிர்வாகம் அந்த 3 மாணவர்களையும் கண்டித்து உள்ளது. இந்த முன்விரோதத்தில் அந்த மாணவர்கள் மேலும் 3 பேருடன் சேர்ந்து, சின்னத்துரையையும், அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன்-தங்கை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story