குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கொடைரோடு அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.
கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி, குல்லலக்குண்டு ஆகிய ஊராட்சிகளில் வசிக்கிற மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வழிநெடுகிலும் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி முருகத்தூரான்பட்டி என்னுமிடத்தில் பதிக்கப்பட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக செல்கிறது. கடந்த 2 நாட்களாக தண்ணீர் பீறிட்டு செல்வதால், சாலையோரத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. குழாய் உடைப்பு எதிரொலியாக பள்ளப்பட்டி, குல்லலக்குண்டு ஊராட்சிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தற்போது உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வீணாவது வாடிக்கையாகி விட்டது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 ஊராட்சிகளில் வசிக்கிற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.