வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை திருட்டு
x

கே.புதுப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் திருடி சென்றனர்.

புதுக்கோட்டை

நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு

அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி கழனிவாசல் செட்டி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் இவருடைய மனைவி தேவி மற்றும் குழந்தைகள் வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை தேவி வீட்டை பூட்டி விட்டு சிவகங்கை மாவட்டம், அழகாபுரியில் உள்ள தனது தாய் வீட்டு திருவிழாவிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் வீட்டின் முன்புறமுள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த 4 பீரோக்களை உடைத்து அதில் இருந்த சுமார் 7 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளிக் கொண்டு அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தேவிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேவி வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்து விட்டு கே.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கே.புதுப்பட்டி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் நகை- வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story