கிரேன் கம்பி அறுந்ததில் பாய்லர் விழுந்து வடமாநில தொழிலாளி பலி


கிரேன் கம்பி அறுந்ததில் பாய்லர் விழுந்து வடமாநில தொழிலாளி பலி
x

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு பகுதியில் நடந்த கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி கிரேன் கம்பி அறுந்ததில் பாய்லர் தலையில் விழுந்து பலியானார்.

திருநெல்வேலி

மானூர்:

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு பகுதியில் நடந்த கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி கிரேன் கம்பி அறுந்ததில் பாய்லர் தலையில் விழுந்து பலியானார்.

குப்பை கிடங்கு

நெல்லை மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ராமையன்பட்டி அருகில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் கொட்டப்பட்டு வருகின்றது. இதில் இறைச்சி கழிவுகளை பதப்படுத்துவதற்காக தொழில் கூடம் அமைய உள்ளது. அதற்கான பாய்லர்கள் மற்றும் கொள்கலன்கள் நிறுவும் பணி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு துணை ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமாநில ஊழியர் சாவு

நேற்று அங்கு பாய்லர் மற்றும் கொள்கலன்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது துணை ஒப்பந்த ஊழியரான உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் விலாஸ் மகன் ராம்நயன் உள்ளிட்டவர்கள் கீேழ நின்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கிரேன் மூலம் பாய்லரை, ஆபரேட்டர் செந்தில்மணி என்பவர் தூக்கினார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் இரும்பு கம்பிகள் அறுந்தது. இதனால் பாய்லரின் அடிப்பகுதி, கீழே பணியில் இருந்த ராம்நயனின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராம்நயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்து மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ராமையன்பட்டி குப்பை கிடங்கு பகுதியில் நடைபெறுகின்ற கட்டுமான பணியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் அளிக்க வேண்டும்.

இறந்தவரின் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவி வழங்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பப்பாண்டியன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது.


Next Story