விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் 2-வது நாளாக தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் 2-வது நாளாக தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் படகு தளத்தில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து 10.30 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதைதொடர்ந்து 2½ மணி நேரம் தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. காத்திருந்த சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்படத்தை பார்த்து ரசித்தனர். மேலும் வட்டக்கோட்டைக்கு செல்லும் படகும் இயக்கப்படவில்லை.