தொல்.திருமாவளவன் மீது பா.ஜ.க. புகார் மனு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் மனு ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனருக்கு பாஜக அனுப்பியுள்ளது.
சென்னை,
தமிழக பா.ஜ.க. துணை தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி, ஆன்லைன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆர்.எஸ்.எஸ். பேரணி வருகிற நவம்பர் 6-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் அதே நாளில் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை தனது கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கப்போவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொல்.திருமாவளவன் மீதும், அவரது கட்சியினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும் அதில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுரை வழங்குமாறு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.