பா.ஜனதா தலைவர்கள் பலர் காங்கிரசில் இணைவார்கள்; முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
பா.ஜனதா தலைவர்கள் பலர் காங்கிரசில் இணைவார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
பெங்களூரு:
பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தானாகவே முன்வந்து காங்கிரசில் இணைந்து வருகிறார்கள். யாரையும் காங்கிரசுக்கு வரும்படி அழைப்பதில்லை. இனிவரும் நாட்களில் மேலும் பல பா.ஜனதா தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைவார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களும், காங்கிரசில் இணைய தயாராக உள்ளனர். தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் மக்கள் மனதில் காங்கிரஸ் இடம் பிடித்துள்ளது. மாநிலத்தில் செயல்படுத்தி வரும் இலவச திட்டங்கள், மற்ற மாநிலங்களிலும் காங்கிரசுக்கு கை கொடுக்கும். மற்ற மாநில தேர்தலிலும் இது பிரதிபலிக்கும். ஏனெனில் காங்கிரஸ் கூறிய வாக்குறுதியின்படி 5 இலவச திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதனால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் அரசு கவிழும் என்று குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வரும் நாட்களில் கர்நாடக அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.