கொடைக்கானலில் கூட்டமாக உலா வந்த காட்டெருமைகள்
கொடைக்கானலில், கூட்டமாக காட்டெருமைகள் உலா வந்தன. இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மிரள வைக்கும் காட்டெருமைகள்
'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலில், கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. இதேபோல் அங்குள்ள வனப்பகுதியில் மிரள வைக்கும் விலங்குகளும் உள்ளன.
குறிப்பாக கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிக அளவில் வலம் வருகின்றன. இவை அடிக்கடி நகர் பகுதிக்குள் புகுந்து சுற்றுலா பயணிகள், விவசாயிகள், உள்ளூர்வாசிகளை அச்சுறுத்தி வருவது தொடர்கதையாகி விட்டது.
கடந்த வாரம் பட்டப்பகலில் கொடைக்கானலில் பிரதான சாலையில் நின்றிருந்த 2 பேரை காட்டெருமை முட்டி தூக்கி வீசியது. இதில் ஒருவர் உயிரிழந்து விட்டார்.
அலறியடித்து ஓட்டம்
இந்தநிலையில் நேற்று காலை காட்டெருமைகள் கூட்டமாக கொடைக்கானல் நகருக்குள் புகுந்தன. கொடைக்கானலில் வத்தலக்குண்டு பிரதான சாலையில் உகார்த்தே நகர் பகுதியில், 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வந்தன. அவை அங்கும், இங்குமாக ஓடின.
இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உயிர் பிழைக்க அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அன்றாட வேலைக்கு செல்வோர் சாலையில் வந்த காட்டெருமைகளை கண்டு மிரண்டு போய் ஆங்காங்கே ஒளிந்து கொண்டனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு அவர்கள் சென்றனர்.
இதேபோல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள், காட்டெருமைகளை கண்டவுடன் கதிகலங்கி போய் விட்டனர். தங்களது வாகனங்களை திருப்பி வேறு திசையில் பயணித்து தற்காத்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனிடையே காட்டெருமைகள் பிரதான சாலையின் நடுவே நின்று கொண்டதால், வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் காட்டெருமைகளை விரட்ட முயன்றனர். இருப்பினும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதான சாலையில் காட்டெருமைகள் அங்குமிங்குமாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் செண்பகனூர் அருகே உள்ள வனப்பகுதிக்குள் காட்டெருமைகள் சென்று விட்டன. அதன்பிறகே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். போக்குவரத்தும் சீரானது. எனவே கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.