அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில், 218 பேர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்

சைக்கிள் போட்டி

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நேற்று காலை நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் நடந்த இந்த சைக்கிள் போட்டியை பிரபாகரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார்.

சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது. 13 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டரும், 15 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 7 கிலோ மீட்டரும், 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 9 கிலோ மீட்டர் தூரம் என வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன.

218 பேர் பங்கேற்பு

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 218 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சைக்கிள் போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மிதுன் முதலிடமும், ஆதிசேஷன் 2-வது இடமும், ஆதவன் 3-வது இடமும், மாணவிகள் பிரிவில் அபிநயா முதலிடமும், தீபிகா 2-வது இடமும், மிஸ்திகா 3-வது இடமும் பிடித்தனர். 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கோபிநாத் முதலிடமும், பிரதீப் 2-வது இடமும், எல்விஸ் 3-வது இடமும், மாணவிகள் பிரிவில் கவுசல்யா முதலிடமும், வினிஷா 2-வது இடமும், மதுபிரியா 3-வது இடமும் பிடித்தனர்.

17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வேம்படியான் முதலிடமும், பால்ராஜ் 2-வது இடமும், கமலேஷ் 3-வது இடமும், மாணவிகள் பிரிவில் அமலோற்புவ பிரின்சியா முதலிடமும், ஹர்ஷினி 2-வது இடமும், பரமேஸ்வரி 3-வது இடமும் பிடித்தனர்.

பரிசுகள்

இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.250-ம் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் அன்று வழங்கப்படவுள்ளது.

இதில் நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story