பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.20 அடியாக உயர்வு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.20 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.20 அடியாக உயர்ந்தது.
மழை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
தண்ணீர் வரத்து குறைவு
இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துவிட்டது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து உள்ளது.
நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 214 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 721 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97.20 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.