பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரம்-பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பைப் பெறுகிறதா?; வாகன பிரியர்கள் கருத்து
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரம், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறுகிறதா என்பது குறித்து வாகன பிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கால் நடையாக பயணம் செய்து வந்த மனிதர்கள், கால்நடைகளை பயணத்திற்கு பயன்படுத்தத் தொடங்கிய பிறகுதான் வாகனங்கள் உருவாக தொடங்கின.
மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்பட்ட காலங்களில் நமக்கு பயணத் தூரமும், பயணச் செலவும் குறைவாகவே இருந்தன.
மிஞ்சினால் ஒருநாளில் ஐந்தோ, பத்தோ கிலோ மீட்டர் தூரம்தான் பயணம் இருக்கும். கொஞ்சம் புல்லும், கொள்ளும், புண்ணாக்கும் மட்டுமே செலவாக இருக்கும்.
மாடு, குதிரைகளின் கழிவுகளில் பக்கவிளைவுகள் இல்லை. பயன்கள் மட்டுமே இருந்தன.
வாகனங்களில் என்று எந்திரம் நுழைந்ததோ அன்று, பயணதூரமும் அதிகமானது. பெட்ரோல், டீசல், கியாஸ் என்று பயணச் செலவும் அதிகமாக உயர்ந்தது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பக்கவிளைவுகளும் அதிகமானது.
பேட்டரி வாகனங்கள்
இன்றைய காலகட்டத்தில் நாம் பயணத்தையோ, பயண தூரத்தையோ குறைக்க முடியாது. பயணச் செலவையும், பக்க விளைவுகளையும் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யலாம். அதற்கு வசதியாக வந்து இருப்பதுதான் பேட்டரிகளில் இயங்கும் வாகனங்கள்.
பொது போக்குவரத்துகளை நாடி, தேடிச்சென்ற மக்கள், இப்போது நினைத்த நேரத்தில் பயணப்பட்டு செல்லும் வகையில், சொந்தமாக வாகனங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வாகனம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் அங்கமாகிவிட்டது.
எரிபொருள் விலை
வாகன எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்றம் கண்டதால், புதிய வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது.
அந்த எரிபொருட்களுக்கு மாற்றாக, நவீன நாகரிக சூழலுக்கு ஏற்ற வகையில் சந்தைக்கு வந்திருக்கும் மின்சார வாகனங்கள் மேல் தற்போது பலர் கவனம் திரும்பி இருக்கிறது.
விலை அதிகம் என்பதால், ஆரம்பத்தில் அதற்கு மக்கள் மத்தியில் மவுசு இல்லாவிட்டாலும், எரிபொருள் விலை ஏற்றம், மாசு இல்லை, செலவு குறைவு, அரசு மானியம் போன்ற காரணிகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் பார்வை அதன்மேல் விழத்தொடங்கி இருக்கிறது.
அதன் காரணமாக, ஆட்டோ மொபைல் துறையில் இருக்கும் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியை சற்றுக் குறைத்ததோடு, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றன.
இடையில் ஆங்காங்கே சில மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தினாலும், அது தற்போது மறைந்து, மீண்டும் விற்பனை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வசதியாக இருக்கிறதா?
பேட்டரி விலை அதிகமாக இருக்கிறது, சார்ஜிங் வசதி போதுமான இடங்களில் இல்லை போன்ற சில குறைகள் கூறப்பட்டாலும், மின்சார வாகனங்கள் எதிர்கால மாற்றத்தின் கட்டாயம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
நகரங்களில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களிலும் இனி அதற்கான வசதிகள் வரவாய்ப்பு இருக்கிறது.
தற்போது மின்சார வாகனங்கள் மக்களின் பயன்பாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது? எந்த வகையில் வசதியாக இருக்கிறது? அதன் சாதக பாதகம் என்ன? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-
தனியார் நிறுவன பணியாளர் நியாஸ் (பழனி):- மின்சார வாகனத்தை பொறுத்தவரை அன்றாட அலுவலக வேலைக்கு செல்லும் நபருக்கு ஏற்றது. தொடக்கத்தில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல முடிந்ததால், அவசர தேவைக்கு அதை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது அதிக வேகத்திலும் செல்லும் வசதியுடன் வாகனங்கள் வந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களை போல், சார்ஜ் போடும் வசதி இல்லாததால் வெகுதூர பயணத்துக்கு ஏற்றதல்ல. மற்றபடி பெண்கள், விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. பால் வியாபாரிகள், விவசாயிகள், பெண்கள் என பலரும் மின்சார வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பெண்களுக்கு ஏற்றது
மெக்கானிக் செல்வம் (ஒடுகம்பட்டி):- புகை மாசு இல்லாத மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது. பெண்கள் முதல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிகவும் எளிதாக இருக்கிறது. பெட்ரோல் விலை 100-ஐ தாண்டிவிட்ட நிலையில் மின்சார வாகனங்களை அனைவரும் பயன்படுத்த வேண்டும். பெரிய நகரங்களில் மின்சார வாகனத்துக்கு ரீசார்ஜ் பாயிண்டுகள் இருக்கின்றன. அதேபோல் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்பட முக்கிய இடங்களில் ரீசார்ஜ் பாயிண்டுகள் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் நெடுந்தூரம் செல்வதற்கு ஏற்ற வகையில் திறன்கொண்ட பேட்டரிகளை பொருத்த வேண்டும். அதன்மூலம் மின்சார வாகனத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயரும்.
தனியார் ஊழியர் ஜெயமணி (புகையிலைபட்டி) :- பேட்டரி வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எரிபொருள் செலவு குறைவதால் பலரும் அதை தேர்வு செய்கின்றனர். இது காற்று மாசு ஏற்படுவதை தடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது. மேலும் வீட்டிலேயே ரீசார்ஜ் செய்து கொள்வதால் வசதியாக இருக்கிறது. அதேநேரம் பேட்டரி வாகனங்களில் நீண்ட தூரம் செல்ல முடியாது. இந்த குறையை சரிசெய்தால் அனைவரும் பேட்டரி வாகனங்களை வாங்கி பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். மின்சார வாகனங்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
======
தமிழ்நாட்டில் மின்சார
வாகனங்கள் விற்பனை
ஆண்டு - மொத்த வாகனங்களின் பதிவு - மின்சார வாகனங்கள் பதிவு
2018 - 21,14,575 - 1,332
2019 - 19,68,529 - 3,444
2020 - 14,92,303 - 5,698
2021 - 15,14,902 - 30,034
2022 - சுமார் 15 லட்சம் - சுமார் 53 ஆயிரம்
======
31 கோடி வாகனங்கள்
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் சுமார் 31 கோடி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 10 சதவீதம் தமிழகத்தில்தான் நடந்து இருக்கின்றன.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வாகனங்கள் விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டின் நவம்பர் மாத விற்பனையைவிட அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.
அதன்படி, இருசக்கர வாகனங்கள் 24 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 80 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் (கார் உள்பட) 21 சதவீதமும், டிராக்டர் 57 சதவீதமும், வணிக ரீதியிலான வாகனங்கள் 33 சதவீதமும் விற்பனை உயர்ந்துள்ளது.
------