பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி
பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளித்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டனர். மெயின் அருவியில் நேற்று காலை 9.15 மணிக்கு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். மதியம் சுமார் 12 மணிக்கு மீண்டும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலை நேற்று இரவு வரை நீடித்தது.
பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிப்பதற்கு அனுமதி அளித்து கலெக்டர் ஆகாஷ் நேற்று காலை உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று இரவு சுமார் 7 மணிக்கு குளித்துக் கொண்டிருக்கும்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.