ஆழியாறு அணை 100 அடியை எட்டியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ஆழியாறு அணை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
பொள்ளாச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ஆழியாறு அணை 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆழியாறு அணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7½ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நீரை ஆழியாற்றில் மணக்கடவு என்ற இடத்தில் அளந்து கேரளாவுக்கு கொடுக்கப்படுகிறது.
இது தவிர பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையையும் ஆழியாறு அணை மூலம் பூர்த்தி செய்கிறது.
100 அடியை எட்டியது
இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதையடுத்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை கொட்டுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று பகல் 1 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்தது. கோடை காலத்தில் வெளியே தெரிந்த பாறைகள் நீரில் மூழ்கின. இதனால் ஆழியாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நீர்வரத்து கண்காணிப்பு
ஆழியாறு அணையில் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்கலாம். தற்போது அணையில் 2 ஆயிரத்து 664 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணை முழுகொள்ள ளவை எட்டுவதற்கு இன்னும் 1200 மில்லியன் கன அடி நீர் தேவை. இன்று (நேற்று) பகல் 1 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.
அணைக்கு அப்பர் ஆழியாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 2,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.