ஹெல்மெட் அணியவில்லை என ஆட்டோ டிரைவருக்கு அபராதம்


ஹெல்மெட் அணியவில்லை என ஆட்டோ டிரைவருக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 Nov 2022 1:03 AM IST (Updated: 23 Nov 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அணியவில்லை என ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் சங்குத்திடல் 19-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன்(வயது 35). டிரைவரான இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தீனதயாளன், தற்செயலாக தனது செல்போனில் பரிவாகன் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் தனது ஆட்டோவின் எண்ணை பதிவிட்டு பார்த்துள்ளார். அதில், கடந்த மாதம் 7-ந் தேதி அவருக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில், சிக்னலில் விதிமுறை மீறல், ஹெல்மெட் அணியவில்லை மற்றும் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின்போது ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கவில்லை ஆகிய 3 காரணங்களை தெரிவித்து, ரூ.300 அபராதம் விதித்து, அதனை ஆன்லைனில் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீனதயாளன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனது மொபைல் செயலியில் இருந்து ஒரு நகல் எடுத்து அதனை தனது தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சக ஆட்டோ டிரைவர்களிடம் காண்பித்தார். அதைக்கண்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக தீனதயாளன் கூறுகையில், நான் போக்குவரத்து விதிகளை மீறவில்லை. போக்குவரத்து போலீசார் எனது வாகனத்தை சோதனை மற்றும் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் கணக்கு காண்பிப்பதற்காக போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் ஆட்டோ ஓட்டும் டிரைவருக்கு ெஹல்மெட் அணிவது அவசியமா?. போக்குவரத்து போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையால், என்னை போன்ற தினமும் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்துபவர்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த அபராத தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாவிட்டால், கூடுதல் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும். அல்லது அபராத தொகையை கட்டாமல் அலட்சியமாக இருந்துவிட்டால், வாகன தகுதிச்சான்று பெறும்போது சிக்கலாகிவிடும். எனவே தமிழக அரசு தலையிட்டு, ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், வாகன எண்ணை குறித்துக்கொண்டு இதுபோன்று வழக்குப்பதிவு செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும், என்றார்.


Next Story