3-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டிய ஆத்தூர் காமராஜர் அணை
தொடர் மழை காரணமாக ஆத்தூர் காமராஜர் அணை 3-வது முறையாக முழுகொள்ளளவை எட்டியது.
செம்பட்டி அருகே ஆத்தூர் காமராஜர் அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 23.5 அடி ஆகும். அணையில் 23.5 அடி வரை நீர் தேக்கலாம். இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஆத்தூர், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், சின்னாளப்பட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அணைக்கு ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மழை பெய்தால் நீர்வரத்து ஏற்படும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால் அணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, செப்டம்பர் 5-ந்தேதி என 2 முறை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. தற்போது நேற்று 3-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் இனிவரும் நாட்களில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது. ஆத்தூர் காமராஜர் அணை மறுகால் பாய்ந்து செல்வதால், பாசன விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.