கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில்உயர்தர உள்ளூர் ரக பயிர் கண்காட்சிவியாழக்கிழமை நடக்கிறது
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் உயர்தர உள்ளூர் ரக பயிர் கண்காட்சி வியாழக்கிழமை நடக்கிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவிப்பின்படி உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு அனைத்து பயிர்களிலும் உயர்தர ரகங்களை காட்சிப்படுத்தலாம். வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இந்த கண்காட்சியின் மூலம் வீரியமிக்க குணங்களை கொண்ட ரகங்களை கண்டறிந்து புதிய ரகங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும். எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள உயர்தர உள்ளூர் ரகங்களை கண்காட்சியில் காட்சி படுத்திடவும், கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பனை அதிக அளவில் உள்ளதாலும் 2023-2024 வேளாண் தனிநிதிநிலை அறிக்கையில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க நிதி ஓதுக்கீடு வழங்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பனை விவசாயிகள் இதில் அதிக அளவு கலந்து கொண்டு குறுகிய கால, குட்டை அதிக மகசூல் தரும் பனை வகைகளை காட்சிப்படுத்தவும், உள்ளூர் உயர்தர ரகங்களை காட்சிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.