ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
இதில் ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் மாதத்தின் முதல் தேதியன்று ஊதியம் வழங்க வேண்டும். டி.பி.சி. பணியாளர்களுக்கு தின ஊதியமாக ரூ.707 வழங்க வேண்டும். 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். தூய்மை பணி, குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மேற்கண்ட கோரிக்கை குறித்து மனு அளிக்கப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.