கைதான வாலிபருக்கு திடீர் உடல் நலக்குறைவு
பொள்ளாச்சியில் நடந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு, கோவை சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை
பொள்ளாச்சியில் நடந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு, கோவை சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுஜய்(வயது 27) என்பவர் தனது மனைவி ரேஷ்மாவுடன்(23) வசித்து வந்தார். இதில் ரேஷ்மா, கர்ப்பிணியாக உள்ளார்.
சுஜய்க்கு, திருமணத்துக்கு முன்பே கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுபலட்சுமி(20) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவி கொலை
ஆனால் சுபலட்சுமியிடம் தெரிவிக்காமல், ரேஷ்மாவை அவர் திருமணம் செய்ததாக தெரிகிறது. இதை அறிந்த சுபலட்சுமி, அந்த குடியிருப்புக்கு சென்று, அதுகுறித்து சுஜய் மற்றும் ரேஷ்மாவிடம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கணவன்-மனைவி இணைந்து சுபலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கேரளாவுக்கு தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மகாலிங்கபுரம் போலீசார், கேரளாவிற்கு சென்று அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திடீர் மூச்சுத்திணறல்
இந்த நிலையில் சிறையில் இருந்த சுஜய்க்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட அவரை, சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு கைதிகள் வார்டில் சுஜயை தங்க வைத்தனர். அவரது உடல் நலம் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.