மனைவியை அபகரித்ததால், நண்பருடன் சேர்ந்து தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர் கைது


மனைவியை  அபகரித்ததால், நண்பருடன் சேர்ந்து தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர் கைது
x

கிண்டி பஸ் நிறுத்தத்தில் குப்பை பொறுக்கும் தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தனது மனைவியை அபகரித்ததால் நண்பருடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது.

சென்னை

பஸ் நிறுத்தத்தில் வசிப்பு

சென்னையை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவருடைய மனைவி சந்தியா (29). இவர்கள், 11 மாத ஆண் குழந்தையுடன் கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கடந்த 3 மாதங்களாக தங்கி உள்ளனர்.

கார்த்திக், குப்பைகளை பொறுக்கி அதில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரும்புகளை கடையில் போட்டு அந்த வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தார்.

அடித்துக்கொலை

இந்தநிலையில் நேற்று காலை கிண்டி பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கையில் கார்த்திக், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திக் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

மனைவியை அபகரித்ததால்...

சந்தியாவுக்கு ஏற்கனவே பாண்டியன் என்பவருடன் திருமணமாகி இருந்தது. இதற்கிடையில் கார்த்திக்குடன் சந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா, கணவர் பாண்டியனை விட்டு பிரிந்து கார்த்திக்குடன் குடும்பம் நடத்தி வந்தார்.

தனது மனைவியை அபகரித்த கார்த்திக் மீது பாண்டியன் கடும் கோபத்தில் இருந்து வந்தார். பல இடங்களில் அவரை தேடி வந்தார். இந்தநிலையில்தான் தனது மனைவி சந்தியாவுடன், கார்த்திக் கிண்டி பஸ் நிறுத்தத்தில் வசிப்பது பாண்டியனுக்கு தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு தனது மற்றொரு நண்பருடன் அங்கு சென்ற பாண்டியன், தனது மனைவியுடன் படுத்து இருந்த கார்த்திக்கை அடித்துக்கொன்று விட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் தேனாம்பேட்டையில் பதுங்கி இருந்த பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story