நகராட்சி, பேரூராட்சிகளில் பகுதி சபை கூட்டம்
பழனி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பகுதி சபை கூட்டங்கள் நடந்தது.
பழனி நகராட்சி
உள்ளாட்சி தினத்தையொட்டி பழனி நகராட்சி 15-வது வார்டில், பகுதி சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆணையர் கமலா, நகர்நல அலுவலர் மனோஜ்குமார், பொறியாளர் வெற்றிசெல்வி, பகுதி சபை உறுப்பினர்கள் கிருபானந்த சிவன், சரவணன், நடராஜ் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் லட்சுமிபுரம் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தேவைப்படுகிற இடங்களில் சாக்கடை கால்வாய்கள் கட்ட வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர். மேலும் லட்சுமிபுரம் கிழக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சாக்கடை கால்வாயில் விபத்து ஏற்படாமல் இருக்க சாய்வு தளம் அமைக்கவும் வலியுறுத்தினர். முடிவில் பகுதி சபை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
பழனி நகராட்சி 20-வது வார்டில், பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வார்டு கவுன்சிலர் பத்மினி முருகானந்தம் தலைமை தாங்கினார். நகராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அந்த வார்டுக்கு உட்பட்ட 7 தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, வார்டு பகுதியில் உள்ள குடிநீர் குழாய், சாக்கடை கால்வாய், சாலை, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்து கோரிக்கை விடுத்தனர்.
அகரம், தாடிக்கொம்பு பேரூராட்சிகள்
அகரம் பேரூராட்சியில் நடந்த பகுதி சபை கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயபால், செயல் அலுவலர் ஈஸ்வரி, வார்டு கமிட்டிகளின் செயலாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் 15 வார்டுகளிலும், கவுன்சிலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இதேபோல் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது. இதில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், செயல் அலுவலர் சிவகுமார், வார்டு கமிட்டிகளின் செயலாளர்கள் மகாலிங்கம், அமுது மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீரனூர் பேரூராட்சி
கீரனூர் பேரூராட்சியில் பகுதி சபை கூட்டம் நடந்தது. இதில் கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, துணைத்தலைவர் அப்துல் முக்கூர், செயல் அலுவலர் அன்னலட்சுமி, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பேசினர். மேலும் வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிலக்கோட்டை பேரூராட்சி
நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட என்.புதுப்பட்டியில் வார்டு சபை கூட்டம் கவுன்சிலர் லட்சுமி முருகேசன் தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி, நிலக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் என்.புதுப்பட்டி பகுதியில் வசிக்கிற பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெய்க்காரப்பட்டி பேரூராட்சி
இதேபோல் நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் உள்ள 11, 12, 13 ஆகிய வார்டுகளுக்கான பகுதி சபை கூட்டம் கோட்டைமந்தை பகுதியில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சகுந்தலாமணி தங்கவேல், செயல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது குறித்து கோரிக்கை வைத்தனர்.