ஏழை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வடக்கநந்தல் பகுதி சபை கூட்டத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. பேச்சு
ஏழை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று வடக்கநந்தல் பகுதி சபை கூட்டத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. பேசினார்.
கச்சிராப்பாளையம்,
கிராம சபை கூட்டங்களை போல நகர உள்ளாட்சி மன்றங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கநந்தல் பேரூராட்சி சுப்பிரமணி கோவில் தெரு 11-வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு வடக்கநந்தல் பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சின்னசேலம் ஒன்றிய குழு துணை தலைவர் அன்புமணிமாறன், பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத், அலுவலர்கள் வைத்திலிங்கம், லட்சுமணன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற துணை தலைவர் தண்டபாணி வரவேற்றார்.
கூட்டத்தில், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை உறுதிமொழி உறுப்பினருமான உதயசூரியன் கலந்து கொண்டு, அந்த பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
டாஸ்மாக் கடை
அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலே தமிழகத்தில் தான் தற்போது மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்போது கூட்டம் நடந்து வருகிறது.
வடக்கநந்தல் பேரூராட்சி புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற இந்தபகுதி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் வார சந்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் இருந்து புளியமரம் பகுதி வரை சுற்றி வரக்கூடிய சாலையை அகலப்படுத்த நிதியும் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவார். எனவே அவருக்கு என்றென்றும் நாம் ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோரிக்கைகள்
இதையடுத்து அப்பகுதி சேர்ந்த, பெண்கள் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும், குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும், கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைளை உதயசூரியன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
இதில், வடக்கநந்தல் நகர செயலாளர் ஜெயவேல், வார்டு கவுன்சிலர்கள் ராமு. மம்முபாலு, சத்தியா, முகேஷ், மகேந்திரன், பழனி, தசரதன், மாவட்ட கவுன்சிலர் அகிலா பானு அருள், ஆவின் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜா மற்றும் வடக்கநந்தல் நகர தி.மு.க. நிர்வாகிகள் அர்ஜூனன் கலியமூர்த்தி, முத்து, கரிகாலன், திருமால் திலீப், ரமேஷ், வெங்கடேசன், சண்முகம், கோமுகி அணை பாசன வாய்க்கால் தலைவர் சேகர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.