அறந்தாங்கி, திருமயம் அரசு மருத்துவமனைகளில் ரூ.56 கோடியில் புதிய கட்டிடங்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்
அறந்தாங்கி, திருமயம் அரசு மருத்துவமனைகளில் ரூ.56 கோடியில் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.46 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அவசர கால விபத்து பகுதி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர்மெய்யநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
அரசு மருத்துவமனை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார். அதன்படி அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் ஸ்கேன் வசதி, எக்ஸ்ரே வசதி, படுக்கை அறைகள், தீவிர சிகிச்சை பிரிவு, அலுவலக அறை, மருந்தகம், சிறப்பு வார்டு, ரத்த வங்கி, டயாலிசிஸ் அறை, எண்டோஸ் கோபி, அவசர வார்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அறந்தாங்கி பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீட்டின் அருகிலேயே மருத்துவ சிகிச்சையை பெற முடியும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு புதுக்கோட்டைக்கு ஆய்வுக்காக வந்த போது இந்த பகுதியில் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி அவசர சிகிச்சை பிரிவு கேட்டு அமைச்சர் ரகுபதி மூலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலன் கருதி சிகிச்சை அளித்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தார். திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் அவசர கால விபத்து பகுதி கட்டிடம் 3 அடுக்குகளாக கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் ஒரு ஆண்டில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சை
புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி வேண்டி இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் ஆய்வுக்குழு வாரணாசியில் உள்ள பெனாரஸ் இந்து பல்கலைக்கழக பல் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த டாக்டர் டி.பி.சதுர்வேதி மற்றும் மேற்கு வங்காளத்தின் பர்த்வான் பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த டாக்டர் ஜிபன் மிஸ்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர். இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
நான் ஏற்கனவே இந்த பகுதிக்கு வரும் போது டயாலிசிஸ் பயன்பாடு மக்களுக்கு அதிகமாக தேவைப்படுவதாக உள்ளது என கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் செயல்படாமல் இருந்த சித்த மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் என 29 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்கூட்டியே கட்டி முடிக்க வேண்டும். அதேபோன்று கீரனூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மையம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதாக தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரேத பரிசோதனை மையம் உடனே அமைக்கப்பட்டு உடனடியாக பணிக்கு பணியாளரை நியமிக்க கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், அப்துல்லா எம்.பி., வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, ஒன்றிய செயலாளர்கள் அழகு சிதம்பரம், கணேசன், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிக்கந்தர், ராமதிலக மங்கள் ராமன், அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் ஆனந்த், துணைத்தலைவர் முத்து மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பணியாளர்கள், மாவட்ட, ஒன்றிய கட்சி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.