சென்னையில் 14-ந்தேதி தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி


சென்னையில் 14-ந்தேதி தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
x

தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னையில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சென்னை

இப்தார் நிகழ்ச்சி

தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவருமான துறைமுகம் காஜா தலைமை தாங்குகிறார். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு அரசு காஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழ்நாடு அரசு தலைமை காஜி (ஷியா) குலாம் முகமது மன்சூர் காஷிபி, அடையாறு குராஸானி பீர் பள்ளிவாசல் தலைமை இமாம் சதீதுத்தீன் பாஜில் பாக்கவி, டாக்டர் ரேலா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முகமது ரேலா,

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, ஆவடி நாசர், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் சித்திக் செய்யது மீரான் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.


Next Story