சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றதிற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2023-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. மேற்படி, விருதுபெற விரும்பும் பெண்களின் முன்னேற்றதிற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

மேற்காணும் விருதை பெறுவதற்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின், அவர்கள் வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பித்தும் மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம், காஞ்சீபுரம் மாவட்டம் என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story