இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்


இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள பெரும்பான்மையான பயனாளிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக்கணக்கில் பணம் வரவில்லை என தெரிவிப்பவர்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஆதார் பதிவு செய்துள்ள செல்போன் எண் ஆகியவற்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

உரிமைத்தொகை விண்ணப்பங்கள் குறித்த தகவல் பெறுவதற்கு, தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04146-1077, 04146-223265 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இ-சேவை மையத்தில் மேல்முறையீடு

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தகுதியிருந்தும் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இதற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. தகுதியான மேல்முறையீட்டு மனுக்களுக்கு தமிழக அரசே சேவை மையக்கட்டணமாக ரூ.10-ஐ இ-சேவை மையத்திற்கு செலுத்திவிடும். இ-சேவை மையங்கள் மூலமாக பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் கோட்டாட்சியர், சப்-கலெக்டர் ஆகியோரால் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்பட்டு தகுதியிருப்பின் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story