குடவறை கோவிலில் பழமையான சிற்பங்கள்


குடவறை கோவிலில் பழமையான சிற்பங்கள்
x

வெம்பக்கோட்டை அருகே உள்ள குடவறை கோவிலில் பழமையான சிற்பங்கள் உள்ளன என தொல்லியல் ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள குடவறை கோவிலில் பழமையான சிற்பங்கள் உள்ளன என தொல்லியல் ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறினார்.

குடவறை கோவில்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டியில் அருணகிரி மலை என அழைக்கப்படும் மலையில் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடவறை கோவில் அமைந்துள்ளது. அருணகிரி மலையை சுற்றி பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி அதிகம் கிடைத்துள்ளன.

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மக்கள் வசித்துள்ளதாக தடயங்கள் கிடைத்துள்ளன. மலையின் மையப்பகுதியில் 200 அடி உயரத்தில் முற்கால பாண்டியர்கள் குடவறை கோவில் வடக்கு புறமாக அமைத்துள்ளனர். வாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் எவ்வித உருவமும் கிடையாது. ஆனால் கருவறையில் அபிஷேகம் செய்யப்பட்ட நீர் வெளியேறும் வகையில் வாயிலில் நிலைப்படியில் சிறிய வாய்க்கால் போன்று அமைந்துள்ளது.

துவார பாலகர்கள்

கருவறை முன்பு செவ்வக வடிவில் மண்டபத்தில் தூண்கள் மேல் புறமும், கீழ்ப்புறமும், சதுரமாக வெட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் முற்கால பாண்டியர்களின் சிற்ப கலையை அறிய முடிகிறது சிம்மம், யாழி, காவலர்களாக உள்ளனர். தூண்களில் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.

கருவறையின் வாயிலில் எதிர் எதிரே 2 துவாரபாலகர்கள் முறுக்கி விடப்பட்ட மீசையுடன், சிவனுக்குரிய மழு என்ற ஆயுதத்தை கையில் பிடித்து நிற்கின்றனர். மண்டபத்தின் உள்புறம் நடுவே திருமால் உருவம் மேல் புறமும், விநாயகர் தெற்கு சுவற்றிலும், நடராஜர் உருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிற்பக்கலை

விநாயகர், சிவனின் மேற்பரப்பில் இரு கைகளையும் விரித்து அமர்ந்த நிலையில் உள்ளார். தலையின் உச்சியில் கமலம் குடியிருப்பது தனி அழகாக உள்ளது. மார்பில் தொங்கும் குட்டையான தும்பிக்கையில் நுனி வலப்புறம் வளைந்து மேல்நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

காதுகளில் மகரகுண்டலங்களை தாங்கி தோள் மீது சங்கு, சக்கரங்கள், அழகாக அமைக்கப்பட்டுள்ளது. தோள்களில் வாகு என்ற வளையங்களும், கையில் மணி பதித்த வளையங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சிற்பங்கள் கி.பி. 9-ம் நூற்றாண்டில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இ்ந்த குடவறை கோவிலை பாதுகாப்பது அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story