கே.என்.பாளையம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; அழகான பெண் குழந்தை பிறந்தது


கே.என்.பாளையம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; அழகான பெண் குழந்தை பிறந்தது
x

கே.என்.பாளையம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; அழகான பெண் குழந்தை பிறந்தது

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் மலைப்பகுதி குத்தியாலத்தூர் ஊராட்சி எக்கத்தூர் அருகே உள்ள கெம்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ், இவருடைய மனைவி செல்வி (வயது 20).

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வி பிரசவத்துக்காக அத்தியூர்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் செல்விக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.

பின்னர் அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் விஜய், பவளக்குட்டை துணை சுகாதார நிலைய செவிலியர் நிர்மலாதேவி ஆகியோர் உடனடியாக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் செல்வியை அழைத்து சென்றனர். கடம்பூர் வனப்பகுதி சோதனைச்சாவடியை கடந்து கே.என்.பாளையத்தை நெருங்கியபோது செல்விக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே ஆம்புலன்ஸ் டிரைவர் மனோகர் வாகனத்தை ரோட்டு ஓரமாக நிறுத்தினார். ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் விஜய் செல்விக்கு பிரசவம் பார்த்தார். அப்போது நள்ளிரவு 1.35 மணி அளவில் செல்விக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் தாயும், சேயும் பத்திரமாக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் வீட்டுக்கு வந்து செல்வியை ஆம்புலன்சில் அழைத்து சென்று, உரிய நேரத்தில் அவருக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விஜயையும், செவிலியர் நிர்மலாதேவியையும், டிரைவர் மனோகரனையும் செல்வியின் உறவினர்கள் பாராட்டினர்.


Next Story