அமராவதி ஆற்றங்கரையில் புதர் மண்டியிருக்கும் வழித்தடத்தை பராமரிக்க வேண்டும்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில் புதர் மண்டியிருக்கும் வழித்தடத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில் புதர் மண்டியிருக்கும் வழித்தடத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட எல்லை
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு கைகொடுக்கும் ஜீவநதியாக அமராவதி ஆறு உள்ளது. இதன் மூலம் குடிநீர்த்திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் கால்நடைகளின் தாகம் தீர்க்கவும், பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்கவும் அமராவதி ஆறு பயன்பட்டு வருகிறது. திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கோடு போல ஓடிக்கொண்டிருக்கும் அமராவதி ஆற்றின் மீது உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் இரு கரைகளையும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகளை இந்த பகுதியில் தான் கரைத்து வருகிறார்கள்.
விஷ ஜந்துக்கள்
ஆனால் இந்த பகுதிக்கு செல்லும் வழித்தடம் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே அமராவதி ஆற்றுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி வழித்தடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஆற்றில் ஆழமான பகுதியில் பொதுமக்கள் குளித்து ஆபத்தில் சிக்குவதைத் தவிர்க்கவும், கரையோரங்களில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்கும் வகையிலும் இந்த பகுதியில் படித்துறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.