புதர் மண்டியும், சேதமடைந்தும் காணப்படும் அமராவதி பிரதான கால்வாயை பராமரிக்க வேண்டும்
புதர் மண்டியும், சேதமடைந்தும் காணப்படும் அமராவதி பிரதான கால்வாயை பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதர் மண்டியும், சேதமடைந்தும் காணப்படும் அமராவதி பிரதான கால்வாயை பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீராதாரம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய நீராதாரமாக அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் உள்ளது. அவை பாசன ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்தநிலையில் அமராவதி பிரதான கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் செடிகள் மற்றும் புற்கள் முளைத்து புதர்மண்டிக் கிடப்பதுடன், சேதமடைந்தும் கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
'தென்னை, கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்களைக் காப்பாற்ற பிரதான கால்வாய் நீர் பெருமளவு உதவுகிறது. நடப்பு ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 15 நாட்கள் உயிர் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது. ஆனால் கால்வாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமையாக தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பருவமழை
உயிர் தண்ணீர் திறப்பதற்கு முன் பிரதான கால்வாய் மற்றும் பகிர்மானக்கால்வாய்கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் பெருமளவு நீரிழப்பு ஏற்பட்டதுடன் கடைமடைக்கு போதிய அளவில் நீர் சென்று சேராத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ஜனவரி 31 வரை போதிய இடைவெளி விட்டு 135 நாட்களுக்கு பிரதான கால்வாய் மூலம் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்.
ஆனால் நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை இன்னும் தீவிரமடையாத நிலையில் அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
உடைப்பு
நேற்றைய நிலவரப்படி அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 47.77 அடி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 429 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. எனவே ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை. பிரதான கால்வாய் மட்டுமல்லாமல் பகிர்மானக்கால்வாயிலும் பல இடங்களில் புதர்மண்டியும், சேதமடைந்தும் காணப்படுகிறது.
இதுதவிர பல இடங்களில் கற்கள், குப்பைகள், பழைய துணிகள் மற்றும் பாலிதீன் கவர்கள் கால்வாயில் வீசப்பட்டுள்ளது. இவை ஆங்காங்கே தேங்கி நீரோட்டத்தில் தடையை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலை நீடித்தால் சாமராயப்பட்டி போல பல இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அமராவதி பிரதான கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களை முறையாக தூர் வாரவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.