தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன - கவர்னர் தமிழிசை
காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? என்று கவர்னர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
போலீஸ் நிலையத்தில் இருந்த கஞ்சாவை எலிகள் தின்றதாக சப்-இன்ஸ்பெக்டர் அளித்த சாட்சியத்தை தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைதான இருவரை விடுதலை செய்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், 'பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் கஞ்சா, போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் கஞ்சா ஆகியவற்றின் அளவில் வேறுபாடு உள்ளது. இது, போலீஸ் விசாரணையின் உண்மைத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் முழுமையாக கோர்ட்டில் சமர்ப்பிக்காததால் இருவரையும் விடுவிக்க வேண்டும்' என வாதாடினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'போலீசாரின் விசாரணையில் மிகுந்த சந்தேகம் உள்ளது. கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டை போலீசார் நிரூபிக்கவில்லை. எனவே, கைதான இருவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்' என உத்தரவிட்டார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன. நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை காவல்துறையினர் சமர்ப்பிக்கின்றனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பித்துவிட்டனர். எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.