ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார் நகராட்சி பணியாளர்கள் ரஞ்சித் குமார், ராமு, கோபி, பி.நாகலட்சுமி. சி.கோவிந்தராஜ், ஆர்.வினோத் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தேசிய குழு உறுப்பினர் எஸ்.ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்தும், பாராளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றியதை கண்டித்தும், உடனடியாக இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், பீடி தொழிலாளர் சங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் குமார் நன்றி கூறினார்.