திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூலி உயர்வு கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  கூலி உயர்வு கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்
x

கூலி உயர்வு கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உணவு, நிலம், வீடு, கல்வி, சுகாதாரம், சமநீதியுடன் 100 நாள் வேலை மற்றும் கூலி உயர்வு வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கோதண்டன், ராஜேந்திரன், ராஜா, குமரேசன், திருநாவுக்கரசு, ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

கோரிக்கை மனு

இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை, ரூ.600 என கூலி வழங்க வேண்டும், அனைத்து நாட்களிலும் வேலை வழங்க வேண்டும், பணியின் போது இறக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, காயமடைந்தால் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை உருவாக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் விவசாய தொழிலாளர் நல வாரியம் செயல்படுத்துவதை உத்தரவாதம் படுத்த வேண்டும் என்பது உட்பட 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் தொழிலாளர் அனைவரும் இது சம்பந்தமான புகார் மனுவை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து அளித்தனர்.


Next Story