கொண்டைக்கடலை அறுவடை தீவிரம்


கொண்டைக்கடலை அறுவடை தீவிரம்
x

உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருப்பூர்

உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மானாவாரி

களிமண் நிலப்பகுதிகளில் குளிர் காலத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பயிராக கொண்டைக்கடலை உள்ளது. ஐப்பசி-கார்த்திகை மாதங்கள் கொண்டைக்கடலை சாகுபடிக்கு ஏற்ற பருவங்களாகும். அந்தவகையில் உடுமலையை அடுத்த முக்கோணம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியில் கொண்டைக்கடலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தநிலையில் நடப்பு ஆண்டில் கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகசூல் இழப்பால் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மகசூல் குறைவு

'3 மாத பயிரான கொண்டைக்கடலை சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 40 கிலோ வரை விதை தேவைப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் உழவு, உரம், ஆள் கூலி என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளது. ஆனால் விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

பொதுவாக நல்ல பனிப்பொழிவு இருந்தால் கொண்டைக்கடலையில் நல்ல மகசூல் கிடைக்கும். இதனால் தான் கொண்டைக்கடலைக்கு பனிக்கடலை என்று ஒரு பெயரும் உண்டு. அதேநேரத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த மழையால் தற்போது மகசூல் மிகவும் குறைந்துள்ளது. ஒரு ஏக்கரில் 400 முதல் 500 கிலோ வரை மகசூல் பெற வேண்டிய நிலையில் 200 கிலோவுக்கு குறைவாகவே மகசூல் கிடைத்துள்ளது. இதனால் நஷ்டத்தையே சந்தித்துள்ளோம்.'

இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.



Related Tags :
Next Story