அரசியல்வாதியான பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளது - கமல்ஹாசன்


அரசியல்வாதியான பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளது - கமல்ஹாசன்
x

அரசியல்வாதியான பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் இருக்கின்றன என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-

"நீலம் பண்பாட்டு மையம் எத்தனை காலம் இயங்குகிறீர்களோ அத்தனை நூற்றாண்டு உங்களுக்கு ஆயுள். அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல். மக்களுக்கானது தான் அரசியல். ஆளுங்கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும் பட்சத்தில் ஜனநாயகம் நீடூழி வாழும்.

ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா மாறும். என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி. 21 வயதாக இருக்கும் போதிலிருந்தே நான் இதனை சொல்லிக்கொண்டிருக்கிறேன். தற்போது அதனை பலமான வார்த்தைகளில் சொல்லும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. அவ்வளவு தானே தவிர கருத்து மாறவில்லை.

சாதியை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை அம்பேத்கர் தொடங்கி அனைவரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்றும் நடந்தபாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் ஒரு நீட்சியாகத்தான் நீலம் பண்பாட்டு மையத்தை பார்க்கிறேன். ஸ்பெல்லிங் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். மய்யமும், நீலமும் ஒன்றுதான். அரசியல்வாதியான பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story