அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி அ.தி.மு.க. வழக்கு -ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை,
ஜெயலலிதா பேரவையின் இணைச்செயலாளராக உள்ளேன். தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயதீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பே செந்தில்பாலாஜி மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் இருந்தன. போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, தகுதியில்லாத நபர்களுக்கு எல்லாம் வேலை தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கியதால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீக்கினார்.
கவர்னர் உத்தரவு
தற்போது செந்தில்பாலாஜி கோர்ட்டு காவலில் உள்ளதால், அவர் கவனித்து வந்த துறைகள் எல்லாம், பிற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது. செந்தில்பாலாஜி துறை இல்லா அமைச்சராக உள்ளார்.
ஆனால், செந்தில்பாலாஜி துறையில்லா அமைச்சராக நீடிக்க முடியாது என்று தமிழ்நாடு கவர்னர் தெளிவாக உத்தரவிட்டு உள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து எந்த கோர்ட்டிலும் வழக்கு தொடரவில்லை. கவர்னரின் உத்தரவே இறுதியாக உள்ளபோது, செந்தில்பாலாஜி அமைச்சராக தொடருவது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. சட்டப்பூர்வமான அதிகாரம் எதுவும் இல்லாமல், அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி ஆக்கிரமித்து கொண்டுள்ளார்.
நம்பிக்கை இழப்பு
அதுவும் கோர்ட்டு காவலில் உள்ள அவர், அமைச்சராக பதவி வகித்து பொதுநலன் தொடர்பான பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகவே அவர் அமைச்சர் பதவியில் தொடர அனுமதிக்கக்கூடாது.
ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் இருக்கும்போது, தானாகவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விடுகிறார். ஆனால், அமைச்சராக இருப்பவர் கோர்ட்டு காவலில் இருக்கும்போது, அமைச்சர் பதவியில் தொடருவது அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு எதிரானதாகி விடும். அதுமட்டுமல்ல மக்களின் நம்பிக்கையையும் இழக்கக்கூடும்.
நீக்க வேண்டும்
அமைச்சராக இருப்பவர் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. எனவே, செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தால், அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி இதுபோன்ற நடைமுறையில், காலதாமதம் செய்வார். தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும்.
எனவே, எந்த சட்டத்தின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் தொடருகிறார்? என்று செந்தில்பாலாஜியிடம் விளக்கம் கேட்டு, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் விசாரணை
இந்த வழக்கை ஐகோர்ட்டில் வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை நேற்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.